சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள கலெக்டர் காலனியில் நாகூர் கனி (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கதீஜா. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இரவு நாகூர் கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல், அரிவாளுடன் நுழைந்து கடைக்குளேயே அவரை கொடூரமாக வெட்டி கொலைச் செய்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நாகூர் கனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனே அயனாவரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடந்த இந்த கோர சம்பவத்தினால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.