நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சர்வதேச விமான நிலையங்களில் அந்தந்த விமான நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இது ஒவ்வொரு விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை டெல்லி, ஐதாரபாத், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் இந்த மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205, சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயணிகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த மேம்பாட்டு கட்டணம் 90 அதிகரித்து தற்போது 295 ஆகவும், சர்வதேச பயணிகளுக்கு ரூ.450 வசூலிக்க வேண்டும் என மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்படாது. விமான கட்டணத்துடன் இணைந்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிறுவனங்கள் இந்த கட்டணத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து விடும். பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர இறங்கும் இடத்தில் வசூலிக்கப்படாது. தனியாக கட்டணம் வசூலிக்கப்படாததால், பயணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. மறைமுக கட்டணமாக இது வசூலிக்கப்படுவதால் தற்போது விமான கட்டணங்கள் வழக்கத்தை சற்று அதிகரிக்க போகிறது. உயர்த்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தின் படி உள்நாட்டு பயணிகளிடம் ரூ.90, சர்வதேச பயணிகளிடம் 150 உயர்த்தப்பட்டு இருக்கிறது.