முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். தனக்கு உடற்சோர்வு சற்று இருந்தது என்றும் பரிசோதித்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், ஜூலை 14ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் தொடர்பாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று வீடு திரும்புவார் என திமுக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் உடல்நிலை குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவர் பூரண நலமுடன் இன்று வீடு திரும்புகிறார். இதனிடையே, நாளை சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.