fbpx

தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கி கொடுங்க… மத்திய ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிதம்…!

ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைவிட, முழு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ‘11 புதிய பாதைகள்’ என்ற பிரிவில், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.976.10 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், முழு பட்ஜெட்டில் ரூ.301.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ‘15 இரட்டைப் பாதையாக்கல்’ என்ற பிரிவில், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,214.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், முழு பட்ஜெட்டில் ரூ.1,928.80 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தட திட்டங்களுக்கு ரூ.674.80 கோடி அளவுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, அத்திப்பட்டு – புத்தூர், ஈரோடு – பழநி, சென்னை – மாமல்லபுரம் – கடலூர், மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி, ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – இருங்காட்டுக்கோட்டை – கூடுவாஞ்சேரி ஆகிய 7 முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.285.64 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இது, மிகவும் அத்தியாவசியமான இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம் – திண்டுக்கல், திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர் – மேட்டூர் அணை, திருவனந்தபுரம் – கன்னியாகுமரி, மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி, மணியாச்சி – நாகர்கோவில், சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர், காட்பாடி – விழுப்புரம், சேலம் – கரூர் – திண்டுக்கல், ஈரோடு – கரூர், சென்னை கடற்கரை – எழும்பூர், அரக்கோணம் யார்டு வழித்தட இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.

தெற்கு ரயில்வேயில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தொடர்பாக பல பணிகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் ரயில் நிலையம் அமைப்பது, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக கிளாம்பாக்கத்தில் தண்டவாளத்தின் கீழ் மழைநீர் கால்வாய் அமைப்பது, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையங்களில் போக்குவரத்து சீரமைப்பு, சிஎம்டிஏ சார்பில் பொத்தேரி ரயில் நிலையத்தில் 3 மின்தூக்கிகள் அமைப்பது, அனைத்து வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு மெமு ரயில் இயக்குவது போன்ற பணிகள் தாமதம் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டும்.

சென்னை கடற்கரை வரை பறக்கும் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். ரயில்வே கழகத்திடம் அனுமதி பெற்று, பறக்கும் ரயில் பாதையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏசி மின்சார ரயில் சேவையை விரைவாக அறிமுகம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த கட்டண முறைக்கான ரயில்வே கழகத்தின் ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும். சென்னை மண்டலத்தில் காலை, மாலை நேரங்களில் (‘பீக் ஹவர்’) புறநகர் ரயில்களை 5-7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இருவழி பாதை, பயணிகளுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக முக்கிய திட்டங்களை மேலும் தாமதப்படுத்த கூடாது. இதுதொடர்பாக தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

Chief Minister Stalin has written to the Union Minister to allocate adequate funds for railway projects.

Vignesh

Next Post

இந்தியாவில் குரங்கம்மை?. தயார் நிலையில் இருங்கள்!. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு!. மத்திய அரசு அதிரடி!

Tue Aug 20 , 2024
Monkeys in India? Be prepared!. Order flown to all states!. Central government action!

You May Like