ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை. கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. 2,500 சதுரஅடி வரையிலான மனையில், 3,500 சதுரஅடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.