சோழபுரம் கிராமத்தில் வசித்து வரும் பொன் மாடசாமி மற்றும் முத்துராஜ் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு மாடசாமியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரம் பார்த்து முத்துராஜ் போதையில் சென்று மாடசாமியின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் பதறிப் போன மாடசாமியின் மனைவி முத்துமாரி உடனே தனது கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மாடசாமி உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து தனது தம்பி முத்துராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரது வாக்குவாதமும் அதிகரிக்க ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாடசாமி உருட்டு கட்டையை வைத்து முத்துராஜின் தலையில் பலமாக தாக்க ஆரம்பித்தார். இதில் காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார்.
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் மாடசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.