மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது மாணவன் சக மாணவர்களால் 108 முறை குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுவர்களுக்கிடையே கடந்த 24 ஆம் தேதி பள்ளியில் வைத்து சண்டை நடைபெற்றது. இதில் மூன்று மாணவர்கள் சேர்ந்து தங்களுடன் படிக்கும் சக மாணவனை ஜியோமெட்ரி பாக்ஸில் உள்ள காம்பஸ் கருவியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அந்த மூன்று மாணவர்களும் சேர்ந்து இந்த மாணவனை 108 முறை காம்பஸ் கருவியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளியில் சிறுவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகளிடையே ஏற்படும் இது போன்ற கொடூர வன்முறைகள் அதிர்ச்சியளிப்பதாக குழந்தைகள் நல வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவிட்டிருக்கிறது.