கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த 2022, அக்.23ஆம் தேதி கார் குண்டு வெடித்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபீன் என்பவர் பலியானார். தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான இவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் வீட்டில் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. என்.ஐ.ஏ. நடத்திய தொடர் விசாரணையில், உயிரிழந்த முபீனுக்கு உதவியாக இருந்த கோவை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த உமர் பாரூக், ஷேக் ஹிதயதுல்லா, பெரோஸ், இஸ்மாயில், சனோபர் அலி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேரின் பெயர்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது இத்ரிஸ் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகமது அசாருதீன் என்ற அசார், வேறொரு பயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.