ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற ஒரு கும்பலிடம் தான் தனது முதலீட்டை இழந்திருக்கிறார்.
சென்னையிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியான அவர் படிக்கும் போதே பார்ட் டைமாக தொழில் செய்து தன்னுடைய பெற்றோருக்கும் உதவலாம் என்று எண்ணத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வந்த பங்குச்சந்தை விளம்பரத்தை நம்பி முப்பதாயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்த நிலையில் அதை இழந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலிலிருந்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவமறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணையும் நடத்தி வருகின்றனர். இது போன்ற போலி கும்பல்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் பொது மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.