நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், விஜய்யின் நண்பராக நடித்த பெஞ்சமின் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு, பார்த்திபன் – முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான ‘வெற்றிகொடிக்கட்டு’ படத்தில் காமெடி ரோலில் நடித்து அறிமுகமானவர் பெஞ்சமின். இவர் 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் அவருக்கு நண்பனாக கண்ணப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
மேலும், தனது சக நடிகர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு உதவி செய்யக்கோரி பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னால் முடிந்த அளவிற்கு சக நடிகர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தற்போது திமுகவில் இணைந்துள்ளார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் பெஞ்சமின். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு செய்து வருவதாக கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தயார் என்றும் தெரிவித்தார்.