தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளில், பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது..
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 446 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 பேருக்கு இன்று முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 186 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. சென்னை, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால், பல இடங்களில் தேர்வு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தமிழ் மொழித்தாள் தேர்வு, 10 மணியை தாண்டியும் தொடங்காததால், தேர்வர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.. தேர்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், இன்று மதியமும் முதன்மை தேர்வு இருப்பதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர்..