தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி இந்த புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற கருத்து கேட்டு பணிகளையும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது புதிய பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான கருத்துக் கேட்பை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்கும் விதமாக, தேசிய பாடத்திட்டம் குறித்த டிஜிட்டல் கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெருமளவிற்கு அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.
கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.