மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசும்போது, “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
கடந்த வாரம் மூன்றரை வயது குழந்தைக்கு எதிராக நடந்த சம்பவத்தில் கூட, அந்த குழந்தையே தவறாக நடந்திருக்கிறது. அதை கவனித்துப் பார்த்தால் தெரியும். எனக்கு கிடைத்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட குழந்தை, அந்தப் பையனை அன்று காலையில் முகத்தில் துப்பியிருக்கிறது. அதுதான் காரணம். எனவே, இரண்டு பக்கமும் நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, இதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என பேசியது சர்ச்சையாக மாறியது.
மாவட்ட ஆட்சியரின் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.