சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க விமனநிலையத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான புத்த கயாவில் இந்த வாரம் நடைபெறும் தலாய்லாமா சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய்லாந்து மற்றும் மியான்மரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதில் 33 பேர் கொண்ட குழுவினருக்கு கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் மியான்மரை சேர்ந்தவர். மீதமுள்ள 4 பேரும் தாய்லாந்து சுற்றுலா பயணிகள் ஆவர். கொரோனா அறிகுறி உள்ள 5 பேருக்கும் எந்த பாத்திப்பும் இல்லை, அவர்கள் அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று BF.7 வகை கொரோனாவா என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புத்த கயா ரெயில் நிலையத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.