தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திககொள்ள வேண்டும்.
இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் 12 வயதுக்கு மேல் முதல் தவணை 1,14,087 பயனாளிகளுக்கும். இரண்டாம் தவணை 9,91,797 பயனாளிகளுக்கும், முன்னெச்சரிக்கை தவணை 10934 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் நாளை காலை 7 மணி முதல் மாலை 7.00 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2,084 சிறப்பு முகாம்களில் 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், 12 முதல் 18 வயதுடைய மாணவ / மாணவியர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
மேலும் 05.01.2022-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி” செலுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500- அரசு விதிப்படி அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.