கொரோனா தொற்றுநோய் இன்னும் ஆபத்தான தொற்றுநோயாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.. ஆனால் ஒருவழியாக கடந்த ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.. உலகின் பெரும்பாலான நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.. எனினும் ஒரு சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது..

இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் இன்னும் ஒரு சர்வதேச நெருக்கடியாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனா பெருந்தொற்று சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக தொடர்கிறது. எனினும் கொரோனா தற்போது ஒரு மாற்றுப்புள்ளியில் உள்ளது.. கொரோனா தொற்றுநோயின் 4வது ஆண்டில் நாம் நுழையும்போது, ஒமிக்ரான் அலை உச்சத்தில் இருந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது நாம் மிகவும் மேம்பட்ட நிலையில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை..
ஆனால் கொரோனாவின் ஆபத்து இன்னும் நீங்கவில்லை.. டிசம்பர் தொடக்கத்தில் இருந்து, வாராந்திர இறப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 8வாரங்களில், 170,000 க்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர். ஆனால் இது பதிவான இறப்புகள் மட்டுமே; உண்மையான எண்ணிக்கை எவ்வளவு என்பது மிக அதிகமாக இருக்கலாம்…

கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், மக்கள்தொகை மற்றும் சுகாதார அமைப்புகளில் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய இன்னும் முயற்சி செய்ய முடியும்.. கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஒரு ஆபத்தான தொற்று நோயாக கொரோனா உள்ளது.. கொரோனாவால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் மற்றும் பாதுகாப்பான முறையில் மாற்றுவது எப்படி என்று நாங்கள் விவாதித்து வருகிறோம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஜனவரி 27-ம் தேதி நடைபெற்ற கொரோனா தொற்றுநோய் தொடர்பான சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (2005) அவசரநிலைக் குழுவின் 14வது கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..