கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்..
கொரோனா முதன்முதலில் பரவத்தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.. ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.. அந்த வகையில் நீதிமன்றங்களிலும் காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் முழுமையாக காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.. எனினும் கடந்த ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில் காணொளி வாயிலாகவே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது..
கடந்த சில மாதங்களாக தான் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட்டு வந்தனர்.. இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதனால் பல மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது..
இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.. காணொளி வாயிலாக ஆஜராக விரும்பினால் வழக்கறிஞர்களுக்கு அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவைப்படுபவர்கள் நேரில் வரலாம் அல்லது காணொளி வாயிலாக ஆஜராகலாம் என்று கூறியுள்ளார்.