தமிழக ரேஷன் கடைகளுக்கான பருப்பு கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில்; கடந்த 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில், தமிழகத்தின் பல ரேஷன் கடைகளில், அரிசி பருப்பு முதலான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது ரேஷன் பருப்புக் கொள்முதலிலும் பெரும் ஊழல் நடப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் “கனடியன் முழு மஞ்சள் பருப்பு” , ஒரு கிலோவிற்கு ரூ.160 – விற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அதன் சந்தை மதிப்பு கிலோவிற்கு வெறும் ரூ.130 தான் என்றும், கிலோவிற்கு ரூ.30 அதிகமாக கொடுத்து வாங்குவதன் மூலம் பருப்புக் கொள்முதலில் சுமார் ரூ.39 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முதல் இந்நாள் அமைச்சர்கள் வரை பலபேர் மீது சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பிவழியும் இந்நிலையில், ஏழை எளிய மக்களின் அடிப்படை உரிமையாக விளங்கும் ரேஷன் பொருட்களிலும் ஊழல் செய்து, சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் இச்செயல் தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, வருமானத்திற்கு மேல் சொத்துக் குவித்த வழக்கில் திமுக அமைச்சர்களான திரு. சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திரு. தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான குற்றங்களை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ஊழல்வாதிகளின் கோட்டையான அறிவாலயத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்கள், இக்குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலளித்து, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.