ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விடு கட்ட முன்னுரிமை வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000: அதேபோல், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்ட மக்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும். அதாவது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
விவசாய பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். பல்லாண்டு பயிர்கள், மரங்கள் சேதமடைந்தால் ஹெக்டேருக்கு ரூ.22,500 வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணம் வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு நிவாரணம்: எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு ரூ.4,000, கோழி இறப்புக்கு ரூ.100 வழங்கப்படும்.
சான்றிதழ்களை திரும்பப் பெற சிறப்பு முகாம்: வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களை திரும்பப் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகள் சிறப்பு முகாம் மூலம் வழங்கப்படும். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாணவர்களுக்கு புதிய நோட்டு, புத்தகங்கள் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ள பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்க தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.