உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் எண்ணெய் சட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள எண்ணெய் ஆலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த தினத்தன்று அந்த ஆலையின் முதலாளி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இளம் பெண்ணை கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வீசி உள்ளனர் இதில் அந்தப் பெண்ணிற்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை எண்ணெய் ஆலையின் முதலாளி மற்றும் அவரது 2 உதவியாளர்களை கைது செய்துள்ளது. மேலும் இளம் பெண் குறித்து சாதி ரீதியாக அவமதிப்பு செய்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.