நம்முடைய வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ ஆசை ஆசையாக செடிகளை வளர்த்து வருவோம். ஆனால், அந்த செடிகளில் பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் போது அது நமக்கு கஷ்டமாக இருக்கும். அதை சரி செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான மருந்துகளை தெளிப்போம். இதனால் நாம் வளர்த்து வரும் செடியில் உள்ள பூக்கள் மற்றும் பழங்களில் கெமிக்கல் கலப்பது மட்டுமல்லாமல் மண்ணின் தன்மையும் மாறிவிடுகிறது. ஆனால், இயற்கையான முறையில் நாமே பூச்சி மருந்து தயார் செய்து பயன்படுத்துவதன் மூலமாக சத்தான காய்கறிகள் நமக்கு கிடைக்கும்.
இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இயற்கையாகவே வேப்பிலையில் கசப்பு தன்மை உள்ளது. கசப்புத் தன்மைக்கு பூச்சிகள் ஓடிவிடும். அதனால் வேப்பிலை ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக உள்ளது. நம்முடைய வீட்டிலேயே வேப்பிலையைக் கொண்டு பூச்சி மருந்து தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வேப்பிலைகளை எடுத்து சுத்தமான நீரில் கழுவி சூடான நீரில் 5 அல்லது 10 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் பச்சை நிறமாக மாறிய பிறகு பேக்கிங் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்கம் குறையும். இயற்கை முறையில் இந்த மருந்து இருப்பதால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நமக்கு கிடைக்கும்.