“நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு” என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு. காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது. பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.