வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 179 பேரையும், 4 உடல்களையும் மீட்டனர். அட்டமலை, முண்டக்காய் மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தேடும் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேடுதல் குழுவில் ஒரு நாய் படையும் இணைக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் ஜேசிபிகள் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாட்டில் உள்ள சூரல்மலையில் ஆற்றின் கிளை நதியின் குறுக்கே தற்காலிக பாலம் கட்டும் பணியை ஆயுதப்படையினர் தொடங்கியுள்ளனர். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டக்காய் மற்றும் அட்டமலை பகுதிகளுக்கு ஆட்கள் மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு இந்த பாலம் முக்கியமானது.
மீட்புக் குழுவினர் நாய்க் குழுவின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், இறந்தவர்களையும் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள், மண் மற்றும் பாறைகளின் அடர்ந்த அடுக்குகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போன்றவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன. தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதிகமான ஆட்கள் மற்றும் இயந்திரங்களின் வருகையுடன் குப்பைகளை அகற்றும் பணி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.