தமிழ் திரையுலகில், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், விஜய் படங்கள் குறித்துப் பேசினார்.
சமீபத்தில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஊக்கத் தொகையும் சான்றிதழும் வழங்கிய விஜய், ‘அசுரன்’ படத்தில் கல்வி எவ்வளவு முக்கியத்தும் என்ற வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதனை உருவாக்கிய பெரிய படைப்பாளியான தாங்களும், மாஸ் நடிகரும் இணைந்தால் பிற்காலத்தில் சேர்ந்தால் நன்றாக இருக்கும்; அதனால், விஜய்க்கு கதை எதுவும் சொல்லியிருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வி எழுப்பினர்.
இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது, “விஜய் சாரும், நானும் மிக நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். விஜய் சார் என்னுடன் பணியாற்ற தயாராகத்தான் இருக்கிறார். தற்போது என்னுடைய கையில் ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு விஜய் சாருடன் இணைய திட்டமிட்டு இருக்கிறேன்; அந்த சமயத்தில் நான் சொல்கிற கதைகள் அவருக்கு சரியாகப்பட்டால், நிச்சயம் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்