வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவரை, வீட்டின் உரிமையாளர் நள்ளிரவில் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் சுல்தான்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், தன்னுடைய ஒன்பது வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, பேசவோ அல்லது கேட்கவோ முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் தான், தன்னுடைய வீட்டில், தந்தையுடன் அந்த சிறுமி நேற்று முன்தினம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில், அந்த வீட்டின் உரிமையாளர், அந்த சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
ஆகவே, பயந்து போன அந்த வீட்டின் உரிமையாளர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று, மீண்டும் வீட்டில் விட்டுவிட்டார். அப்போது அந்த சிறுமிக்கு மயக்கம் தெளிந்ததால், வீட்டின் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த அந்த சிறுமியின் தந்தை, காவல்துறையிடம் புகார் வழங்கினார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை, காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், காவல்துறையினர், அந்த வீட்டின் உரிமையாளர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மிக விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று டி எஸ் பி பாபன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.