பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது; மனுவில் மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும்.
எனவே, துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரி எங்களது நிறுவனம் தரப்பில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.