தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி வேலை பார்த்து வரும் மற்ற மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அப்படி பண்டிகை காலங்களில், சொந்த ஊருக்கு பயணம் செய்யும் நபர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள்.
அந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக, பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மூலமாக, இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முன்கூட்டியே தொடங்கப்படும். அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பாக இயக்கப்படும் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி இருக்கிறது.
அதேபோன்று தெற்கு ரயில்வே சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். அந்த விதத்தில், இந்த வருடம் தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூலை மாதமே முன்பதிவை தொடங்கி விட்டது. ஆனால், முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
இத்தகைய சூழ்நிலையில் தான், தீபாவளி பண்டிகையின்போது அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பாக, இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, 30 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதம் 10ஆம் தேதி பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் நபர்கள், இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோன்று, நவம்பர் மாதம் 11ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் நபர்கள், நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிகிறது. ஆகவே, முன்பதிவு செய்ய விரும்பும் நபர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி ஆகியவற்றின் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையங்களில் இருக்கும் முன்பதிவு நிலையங்களின் மூலமாகவும், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.