கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய சபை முன்னவர் துரைமுருகன், அதிமுகவினர் நடவடிக்கையை விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்பை மறைக்க ஆட்சியர் பொய்யான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையில் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்க திமுக கவுன்சிலர்கள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. திமுக கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முழுக்க காரணம் திறமையற்ற முதலமைச்சர், பொம்பை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தான்” என்று கடுமையாக விமர்சித்தார்.