தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரத்தின் சந்தோஷபுரத்திலிருந்து வேங்கை வாசல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையால் முடிவு செய்யப்பட்டு நேற்று பள்ளம் எடுத்து வேலை ஆரம்பிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறையினர் பாலம் அமைக்கும் இடத்திற்கு அருகே கட்டுமான நிறுவனத்தினர் மணல் போட்டு வைத்துள்ளனர். அந்த மணலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாம்பரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சுரேஷ் என்பவரும் நெடுஞ்சாலை துறையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வந்து இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் திமுக கவுன்சிலர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடையே காரசாரமாக நடந்த விவாதம் தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.