அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14ஆம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேளாண் பட்ஜெட் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இதை சுட்டிக்காட்டி அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”திருவள்ளூரில் திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர், சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இது சட்டவிரோதமானது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்ற பெயரில், தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது திமுக. புதிய கல்வித் திட்டத்தை தங்களின் சுய லாபத்திற்காக எதிர்த்து, திமுக நாடகம் ஆடி வருகிறது. தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியலாகவும் திமுக செய்து வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதித்ததற்கு, புதிதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர்..? என்று பதிவிட்டுள்ளார்.