இன்று உலகை அச்சுறுத்தக் கூடிய வியாதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நீரிழிவு நோய். உலகம் முழுவதிலும் 415 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. வயது மற்றும் பாலின பாகுபாடு இன்றி அனைவரையும் தாக்கக் கூடியதாகவும் இந்த நோய் இருக்கிறது. மாறிவரும் அவசர கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் ஆகியவை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
பொதுவாக நீரிழிவு நோய் நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கால் பாதங்களில் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது கால்களுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் கால் பாதம் வீக்கம் அடையும். இதுவும் நீரிழிவு நோய்க்கான அறிகுறி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டு அந்தப் புண்கள் நீண்ட நாட்கள் ஆறாமல் இருந்தால் மருத்துவரிடம் சென்று அறிவுரை பெறுவது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கால்களுக்கு செல்லும் நரம்பில் ரத்த ஓட்டம் தடைபடலாம். இதன் காரணமாக கூட புண்கள் ஆறாமல் இருக்கலாம். இதனால் மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம்.
இது போன்ற ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன் மருந்து மாத்திரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கலாம்.