தனக்கு அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) இருப்பதாக மலையாள நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். இது கவனக்குறைவு சீர்குலைவு என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த பிரச்னை குழந்தைகளிடம் மட்டுமே காணப்படும். ஆனால் கேரளாவில் குழந்தைகள் இல்லம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மலையாள நடிகர் பகத் ஃபாசில், தனக்கு ADHD கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு 41 வயதில் இந்த நோய் ஏற்பட்டுள்ளதால் இதை குணப்படுத்த முடியுமா என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளதாகவும் பகத் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகு மட்டுமன்றி ரசிகர்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADHD-ஆல் பாதிக்கப்படும் நபர் வெளியுலக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவுகளின் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள நபர் தங்களின் உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிரமப்படுவார்கள். இவர்கள் மிகவும் கவன குறைவாகவும், அதே சமயம் அதிவேகமாகவும் இருப்பார்கள். இவர்களால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார முடியாது.
ADHD-ன் அறிகுறிகள் என்னென்ன?
ஒருவர் பேசும் போது அதை கவனிக்கும் திறன் எப்படி உள்ளது, பிறருடன் பழகும் திறன் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். உங்கள் செயல்பாட்டில் அமைதி தெரியவில்லை, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு விஷயத்தை செய்கிறீர்கள். தேவையற்ற நடத்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதிக கவனக்குறைவுடன் இருக்கிறீர்கள் எனில் அது ADHD-ஆக இருக்க கூடும்.
ADHD உங்களுக்கு இருந்தால் முதலில் கவனக்குறைவுதான் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது. பல படிகளை உள்ளடக்கிய டாஸ்க் ஒன்றை கொடுக்கும் போது, ADHD கொண்ட குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அந்த டாஸ்க்கை தொடங்க அல்லது முடிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். ஏதாவது ஒரு செயலை செய்வது அல்லது அதன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுவதால் இது நிகழ்கிறது.
மேலும் ADHD பாதிப்பு கொண்ட நபர் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக நினைக்க மாட்டார்கள். அடிக்கடி குழப்பத்துடன் காணப்படுவார்கள். மறதி மற்றும் குழப்பம் இரண்டின் காரணமாக கவனச்சிதறலுடன் கூடிய நடத்தையை கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் தங்களின் இலக்கை மறந்து எளிதில் திசை திரும்பிவிடுவார்கள். தங்கள் பொருட்களை சரியான இடத்தில் வைக்க மாட்டார்கள்.
ADHD-யால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் சில நிமிடங்கள் கை, கால்களை வைத்து கொண்டு அமைதியாக உட்கார முடியாது. குழந்தைகளாக இருப்பின் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே அதில் கவனம் செலுத்தாமல் கிளாஸை ரவுண்ட் அடிப்பார்கள். ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தாலும் கை மற்றும் கால்களை அசைத்தபடி நெளிந்து கொண்டே இருப்பார்கள். அமைதியாக இருந்தாலும் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதே போல மற்றவர்களை பேச விடாமல் இடைமறித்து இவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள். மேற்காணும் அறிகுறிகள் 6 மாதத்திற்கும் மேல் நீடித்தால் நிச்சயமாக தகுந்த நிபுணர்களின் உதவியை நாடுவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.