தளபதி விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த GOAT படம் ரிலீஸ் ஆக உள்ளது.
‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.
இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. GOAT படம் பற்றி அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரம்ஜான் வாழ்த்துகளுடன்… விநாயகர் சதுர்த்திக்கு வரோம் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ஆசிரியர் தினம். அதற்கு 2 நாட்கள் கழித்து சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த படத்தை வெளியிடுகின்றனர்.