இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் 2ஆம் தர நகரங்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் கோயம்புத்தூரில் அடுத்தடுத்து நிறுவனங்கள் முதலீடு செய்து வரும் வேளையில், மக்கள் தொகையும், வர்த்தகமும் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 5 வருடத்தில் கோயம்புத்தூர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டிவிஎஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் தற்போது கோயம்புத்தூரில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.தமிழ்நாட்டில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வேர்ஹவுஸ் (கிடங்கு) சேவைகளை அளிக்கும் டிவிஎஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ், நாட்டின் முன்னணி FMCG நிறுவனமான நெஸ்லே உடன் இணைந்து கோயம்புத்தூில் புதிதாக கோல்டு ஸ்டோரேஜ் யூனிட் (cold storage unit) அமைக்க உள்ளது.
இந்த புதிய கிடங்கு மூலம் நெஸ்லே கோயம்புத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனது சப்ளை செயின்-ஐ விரிவாக்கம் செய்ய முடிவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வர்த்தகத்தை பெற முடியும். மேலும் டிவிஎஸ் – நெஸ்லே கூட்டணியில் அமைய உள்ள இந்த கோல்டு ஸ்டோரேஜ் யூனிட் தட்டபவெட்ப நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருட்களை அதிகளவில் சேமித்து, டிமாண்ட் அதிகமாக இருக்கும் நேரில் அதிகளவில் வெளியிட்டு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இப்புதிய கோல்டு ஸ்டோரேஜ் யூனிட் பல்லடம் – கொச்சின் சாலையில் சூலூர் பகுதியில் சுமார் 1.31 லட்சம் சதுரடியில் அமைக்கப்பட உள்ளது என டிவிஎஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் 11 நகரத்தில் இயங்கி வருகிறது, 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 மில்லியன் சதுடரி வேர்ஹவுசிங் தளத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் இலக்கு. TVS Mobility group கீழ் இயங்கி வருகிறது டிவிஎஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.