இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், ஒரே மாதத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
முதலாவதாக, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த அயர்ன் பாக்ஸ்கள், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம். வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த அயர்ன்பாக்ஸை பயன்படுத்த முடியும். கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் – டை – ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் கூடிய, சமையல் கேஸ் சிலிண்டர்களை இதே நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இரண்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது. இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்.
ஆகையால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை பயன்படுத்துவதால், நிறைய விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால்தான், வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தனியாக உயர் அழுத்த மாறுபாடுகளை தாங்கும் திறனில் இந்த ரெகுலேட்டர்கள் உள்ளதுடன், புதிதாக ரப்பர் குழாயையும், இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள எல்பிஜி உபகரணங்கள் ஆய்வு மையத்தில், இதற்கான அங்கீகாரம் கிடைத்ததுமே, உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு சர்ப்ரைஸையும், இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, 5 ஆண்டுக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். ஆனால், பல பேர், அந்த ரப்பர் குழாயை மாற்றுவதே இல்லை. இப்படி, மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விவரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது.
அதனால், அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதற்கு சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், உரியவர்கள் உடனடியாக, இந்த சலுகையை பயன்படுத்தி, ரப்பர் குழாயை மாற்றி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.