கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு பி சவான், மாநிலம் முழுவதும் பசு வதை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை நினைவூட்டியதோடு, பக்ரித் பண்டிகைக்காக கால்நடைகளை பலியிட வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்… தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் பசு வதை தடைச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார். பசுக்கள் மற்றும் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை கழுகுக் கண்காணித்து, பசு வதையைத் தடுப்பதில் முனைப்புடன் செயல்படுமாறு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பொதுவாக, பக்ரீத் பண்டிகையின் போது, பலியிடும் பாரம்பரியம் உள்ளது, அதற்காக பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளும் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறிய அவர், மாநிலத்தில் பசுவதைத் தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்கக் கூடாது என்று காவல் துறை மற்றும் மாவட்ட ஆணையர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து பேசிய அவர் “மாநிலத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்து, பசு வதைத் தடைச் சட்டம் மீறப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்..
பசுவதைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2020, மாடுகளை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது பசுவைக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சர் பிரபு சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த பகுதிகளில் பசு வதை நடப்பது கண்டறியப்பட்டால், அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
பெங்களூரு நகர மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையின் போது பசு வதை மற்றும் (பசு, மாடு, காளை, கன்று உட்பட) பசு வதையை தடுக்க, பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) மண்டலம் மற்றும் நகர மாவட்டத்தின் தாலுகாக்களில் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பசு, மாடு, காளை, கன்று, ஒட்டகம், பதின்மூன்று வயது எருமை உள்ளிட்ட கால்நடைகளை அறுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரபு சவான் எச்சரித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரித் ஜூலை 10 அன்று அனுசரிக்கப்பட உள்ளது.. தியாக விருந்து என்று அழைக்கப்படும் பக்ரித் தினத்தில், அல்லாவின் மீதான பக்தி மற்றும் அன்பை நிரூபிக்க, ஒரு விலங்கு, பொதுவாக ஒரு செம்மறி அல்லது ஆடு ஆகியவற்றை பலி கொடுக்கப்படுகிறது. பலிக்குப் பிறகு, அந்த இறைச்சியை குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.