நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (35). இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல நித்யா அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஆடு மட்டுமே வந்துள்ளது. நீண்ட நேரமாகியும் நித்யா வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன கணவர் விவேகானந்தன், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பகுதிக்கு சென்று பார்த்தார். மேலும், அங்கிருந்த ஓடை பகுதியை மனைவியை தேடிக் கொண்டிருக்கும்போது, முட்புதர் ஒன்றில் நித்யா அரை நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அவர் கழுத்தில் அணிந்த செயின் மற்றும் கம்மல்கள் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடு மேய்க்க சென்ற நித்தியாவை மர்ம நபர் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை திருடிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.