கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் 32 வயதான அலன் அலெக்ஸ். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அலன் அலெக்சை கையும் களவுமாகப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனர்.
இதன்படி அந்த மாணவியின் மூலம் அலன் அலெக்சிடம் நைசாக பேசி கோழிக்கோட்டுக்கு வரவழைத்துள்ளனர். மாணவி அழைத்த இடத்திற்கு சென்றால் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையால், டாக்டர் அலன் அலெக்ஸ் மாணவி சொன்ன இடத்திற்கு காரில் அங்கு வந்துள்ளார். பின்னர், அந்த மாணவியை தன்னுடைய காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள் பாய்ந்து சென்று, அலன் அலெக்சை மடக்கி பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து கோழிக்கோடு வெள்ளயில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அலன் அலெக்சை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.