திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். மேலும் கோவில் விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது என பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பல ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த பல கோவில்களில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கோவில் திருவிழாக்களையும் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பாக நடத்தி வருகிறது.
இவையெல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் தான் சாத்தியமாகி இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் சிதம்பரம் நடராஜர் கோவிலை ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மூன்று நபர்களும் தொல்லியல் துறை சார்பாக மூன்று நபர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் விரைவில் ஆய்வை தொடங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
திருக்கோவில் விவகாரங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த நினைத்தால் அதனை திராவிட மாடல் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது எனவும் எச்சரிக்கை உடைத்திருக்கிறார். சமீபத்தில் அறநிலையத் துறை தொடர்பான விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசை குறை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.