சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்டு பேராசையை தூண்டி நிதி மோசடி செய்யும் இணைய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய் குமார் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.
புதிய இணைய மோசடியை செய்பவர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், எஸ்.எம்.எஸ் அல்லது விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்கிறார்கள். ஆரம்பத்தில் சில யூடியூப் வீடியோக்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் போன்றவற்றுக்கு “லைக்” மற்றும் “கமெண்ட்” போடுவதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று சொல்லி மக்களின் பேராசையைத் தூண்டிவிடுகிறார்கள்.
பின்னர் அவர்களை ஒரு டெலிகிராம் குழுவில் சேர்த்து பொதுவான அறிவுறுத்தலாக, சில வீடியோக்கள், பக்கங்கள் அல்லது இணையதளங்களை லைக் செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்படும். இதற்கிடையில் ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்தி அதிக பணம் பெறும் டாஸ்க்கை அறிமுகப்படுத்தி, மக்களை பிட்காயின், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைப்பதன் மூலம் சில டாஸ்க்குகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள். மக்களை நம்ப வைப்பதற்காக, அவர்கள் செய்த முதலீட்டின் மூலம் பெற்ற லாபத்தை போர்ட்டல் பக்கத்தில் “சொத்து (Assets)” என்ற இடத்தில் காட்டுவர். இது முதலீடு செய்யப்பட்ட தொகையுடன் ஒருவர் ஈட்டிய லாபத்தையும் பிரதிபலிக்கிறது.
தொடக்கத்தில் சிறு முதலீட்டில் பெற்ற லாபம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பின்னர் அந்த நபர் வேறு ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்தும் பணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அங்கு டாஸ்க்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகமாக இருக்கும். இப்போது போர்ட்டல் பக்கத்தில் சொத்துக்களை பார்க்க மட்டுமே முடியும். எந்த நேரத்திலும், மேற்கூறிய சொத்துக்களில் காட்டப்படும் தொகையை திரும்பப் பெற முடியாது. எனவே வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கவோ, லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தொலைபேசி அழைப்பு அல்லது செய்தி மூலம் OTP – ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலிசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த மோசடி தொடர்பாக பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் தொடர்ந்து மோசடி நபர்களால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். எனவே மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை 24 மணி நேரத்திற்குள், ஹெல்ப்லைன் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிப்பதன் மூலம், மோசடி செய்தவர் பணத்தை எடுப்பதற்கு முன், அதை மீட்டு திரும்பப் பெற முடியும். எனவே ஆன்லைன் நிதி இழப்பு புகார்களுக்கு உடனடியாக ஹெல்ப்லைன் எண் 1930-ஐ தொடர்பு கொள்ளவும். விரைவாக தொடர்புகொண்டு புகார் கொடுத்தால் தான் இழந்த பணத்தை உடனே மீட்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகார்களுக்கு http://www.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.