வசதி வாய்ப்பு இருப்பதால், எங்களுக்கு உரிமைத்தொகை வேண்டாம் என்று பெண்கள் கூறியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பேரிடர் மேலாண்மை குறித்து கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் எனது அறிவுறுத்தலுக்கு எதிர்பார்க்காமல், விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இடிந்த கட்டடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டடங்கள், மின்சாரம், மூடப்படாமல் உள்ள குழிகள் போன்றவற்றை பாதுகாப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 31,000 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். உணவு இல்லை என்பதால் பள்ளிகளுக்கு செல்லவில்லை என குறைபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை பொறுத்தவரை மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 64 லட்சம் பெண்கள், தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதால், எங்களுக்கு உரிமைத்தொகை வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.