தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 97.5 அடியைக் கடந்துள்ளது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து அதன் நீர்வரத்தான விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் 4 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால், பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.