மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 103 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில அதிர்வு மதியம் 11:50 மணியளவில் (0620 GMT) ஏற்பட்டதாக USGS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாங்காக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தால் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த 30 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டுமான இடத்தில் 390 தொழிலாளர்கள் இருந்ததாகவும், 80க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மாடி கட்டிடம் தூசியாக இடிந்து விழுவதையும், பார்வையாளர்கள் பீதியில் அலறும் வீடியோக்களும் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் மதிப்பிடுவதால், தாய்லாந்து அரசாங்கம் பாங்காக்கில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா அறிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகரில் பரவலான சேதம் ஏற்பட்டது. இடிந்து விழுந்த கட்டமைப்புகள் மற்றும் பரவலான பீதிக்குப் பிறகு, பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா அவசரகால நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் சிக்கி 103 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது ஆரம்பக்கட்ட தகவல்கள் தான் என்றும், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது நகரப்புரங்களில் இருந்து வந்துள்ள தகவல் மட்டுமே. மியான்மரி கிராமப் புறங்கள் மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் நில நடுக்கத்தின் தாக்கம் குறித்தான தகவல்கள் கிடைக்கவில்லை. நிலநடுக்கத்தால் மியான்மர் முழுவதுமாக மின்சாரம், சாலை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Read more: பாங்காக்கில் அவசர நிலை அறிவிப்பு..!! மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலி..!