வழக்கத்தை விட இந்த வருடம் குளிர் அதிகமாக உள்ளதால், பலருக்கு சளி, காய்ச்சல் பாடாய் படுத்துகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என பலரும் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன தான் குளிர் காலமாக இருந்தாலும், நாம் வழக்கத்தை விட குறைவான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் வெப்பம் அதிகமாகத்தான் இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் மூக்கடைப்பு ஏற்படலாம்.
இது போன்ற காலங்களில் உங்களுக்கு பெரும் உதவியாக இருப்பது புதினா தான். ஆம், புதினாவை தினசரி உணவில் சேர்த்து வருவதால் வறட்டு இருமல், இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, நரம்பு வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒரு வேலை உங்களுக்கு சூட்டினால் தலைவலி ஏற்பட்டால், உடனே புதினாவை அரைத்து நெற்றியில் பற்று போடுவது போல் தேய்த்து விடுங்கள். உடனே உங்களுக்கு நல்ல பலன் தரும்.
நீங்கள் டீ தயாரிக்கும் போது, அதனுடன் புதினா இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் சளி தொந்தரவு உங்களுக்கு இருக்காது, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் இதில் பால் சேர்க்க கூடாது. இந்த தேநீரைக் காலையில் தினமும் குடித்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். நீங்கள் வெந்நீரில் புதினா இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். ஏனென்றால், புதினாவின் நறுமணம் மூக்கு மற்றும் காதுகள் வழியாக சென்று சளி பிரச்சனையை சரி செய்து விடும்.