தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி என்பவரின் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை பாண்டிபஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்கார்டு டிஸ்ட்டிலரிஸ் மதுபான நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் ஜெகத்ரட்சகனின் மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.