சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; எதிர்வரும் கல்வி ஆண்டு 2025 – 26 முதல் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கிட கல்வி ஆண்டு துவங்கும் நாளான ஜூன் 1 முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயிலும் கல்வியின் தன்மைக்கு ஏற்ப முதலில் (KSB) மத்திய முப்படைவீரர் வாரிய இணையதளத்திலும் மற்றும் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் (PMSS) கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிட தகுதியில்லாத முன்னாள் படைவீரர் / விதவையரின் சிறார்கள் மட்டுமே தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்றிட இயலும்.
கல்வி உதவித்தொகை வேண்டி சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். முதல் முயற்சியில் முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பங்களுடன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதற்கான (முதல் முயற்சியில்) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்வி மெய்த்தன்மை உறுதி சான்றிதழினையும் (Bonafide Certificate) சமர்ப்பித்தல் வேண்டும். பாடநிலுவைகளில் பின்னர் தேர்ச்சி பெறுதல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என இவ்விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள் / விதவையரின் சிறார்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் தொகுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஜீன் 1 முதல் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து, விண்ணப்பத்தின் நகலினை சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427 2902903 தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.