டிவிட்டர் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். பொறுப்பை ஏற்றவுடனேயே ஊழியர்கள் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டிவிட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எலான் மஸ்க் டிவிட்டர் தலைவர் பதவியிலிருந்து விலகினால்தான் அந்த நிறுவனத்திற்கு நல்லது, இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் டிவிட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?” என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
இறுதியில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 சதவிகிதம் பேர் பதவி விலக வேண்டாம் என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து தான் உறுதியளித்த படி எலான், டிவிட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என பலர் தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வந்ததால், மிக விரைவில் நான் டிவிட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள் ஒருவர் கிடைத்த பிறகு டிவிட்டர் தலைமை செயலதிகாரி பதவியிலிருந்து விலகுவேன். அதற்கு பிறகு, சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் கவனித்துக் கொள்ளப்போவதாக பதிவிட்டுள்ளார்.
பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளதற்கு பலரும் வரவெற்பு தெரிவித்திருந்தாலும், தனக்கு அடுத்து அந்த பதவிக்கு வருபவர் ஒரு முட்டாள் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.