ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறு ஓ. பன்னீர்செல்வம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..
இதனிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து ஓபிஎஸ் மகனை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கட்சியில் இருந்து நீக்கியதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருதக் கூடாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்..
ஆனால் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். தற்போது உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் கூறி இருந்தார்..
இந்நிலையில் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறு ஓ. பன்னீர்செல்வம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. மேலும் ரவீந்திரநாத் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்க கூடாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் நீக்கிவிட்டதாக கூறியுள்ள ஓபிஎஸ், அவர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..