கேரளா எர்ணாகுளம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி நண்பர்களின் ரி யூனியனில் சந்தித்துக்கொண்ட காதலர்கள் தலைமறைவாகியுள்ள சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி மாணவர்களும் மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும் இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் அவரவர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நண்பர்கள் சேர்ந்து பள்ளியில் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும் இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர். தற்போது 50 வயதை நெருங்கியுள்ள நண்பர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்துக் கொண்டனர். அப்போது எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு இடையே பள்ளி பருவ காதல் உணர்வு நினைவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ரி யூனியன் நிகழ்ச்சியின் முடிந்த போது இருவரும் பள்ளியில் இருந்து திடீரென தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து ரி யூனியன் நிகழ்ச்சிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.