கொல்கத்தா தொடங்கி தமிழ்நாடு வரையிலும் எங்கு திரும்பினாலும் ரெய்டு மயமாகி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, ஊழல் வழக்கு, மோசடி குற்றச்சாட்டுக்கள் என பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் போது, அவர்களது நண்பர்கள், உறவினர்கள் என அவர்களுடைய நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவது உண்டு. ரெய்டு அதிகமாக பரவி வரும் நிலையில், ஒருவர் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எவ்வளவு சவரன் நகைகளை வீட்டி வைத்திருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு விதிகளின்படி, தங்கத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பின் கீழ் இருந்தால், வருமான வரி சோதனை நடவடிக்கையின் போது ஆபரணங்கள் அல்லது தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியாது. தங்கம் அல்லது நகைகளை விவசாயம், வீட்டு சேமிப்பு அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமை போன்ற வெளிப்படுத்தப்பட்ட வருமானம் மூலம் வாங்கினால், அந்த தங்கத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகள் கூறுகின்றன. அறியப்பட்ட வருமான ஆதாரங்களைப் பயன்படுத்தி தங்கம் அல்லது நகைகளை வாங்கும் வரை அவற்றை வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை என்று விதிகள் தெரிவிக்கின்றன.
திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என இருதரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அல்லது 12.5 சவரன் நகைகளை வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. இந்த அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் ஒரு வீட்டில் தங்கம் இருந்தால் அதனை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமுள்ளது.
தங்கத்திற்கு எப்போது வரி செலுத்த வேண்டும்? உங்கள் தங்கத்தை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் விற்க முடிவு செய்தால், அது வருமான வரி அடுக்கு விகிதங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரிக்கு உட்பட்டது. தங்கம் வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு மேல் விற்கப்பட்டால், அந்த விற்பனைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.